பன்னீர்செல்வத்துக்கு நிதி அமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பேன் – ஜெயக்குமார்

jayakumar2

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சேத்துப்பட்டு ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சேத்துப்பட்டு ஏரி மொத்தம் 17 ஏக்கர் நிலம். இந்த பகுதி மக்கள் பயன்படுத்தாத வகையில் இருந்தது. ரூ. 43 கோடியில் மக்கள் பயன்பாட்டிற்கு சுற்றுலாத்தலமாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் சேத்துப்பட்டு ஏரி மேம்படுத்தப்பட்டது. இதனால், தற்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி 2,000 முதல் 3,000 ஆயிரம் பேர் வருகின்றனர். மாதத்துக்கு 12,000 பேர் வருகின்றனர்.

இரண்டாம் கட்டமாக, ரூ. 6 ஆயிரம் கோடி செலவில் விர்சுவல் ரியாலிட்டி தியேட்டர் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் சேத்துப்பட்டு ஏரி மற்றும் மீனவர்கள் நடவடிக்கைகளை காண முடியும். மாணவர்களுக்கு கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த கடல்வாழ் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அதில் அரிய வகை மீன்கள் வளர்க்கப்படும். மேலும், பொது மக்களின் கருத்துகளை கேட்டு, அவர்களுக்கு தேவையானவை செய்யப்படும்.

17 ஆண்டுகள் தி.மு.க, மத்தியில் கூட்டணி இருந்தது. அப்போது, எதுவுமே செய்யாமல், இப்போது அ.தி.மு.க-வை குற்றம் சாட்டுவது சரியில்லை. அ.தி.மு.க ஆட்சி கவிழும் என்று தி.மு.க பகல் கனவு காண்கிறது. ஆறு மாதம் இல்லை அறுபது ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது. நாங்கள்தான் ஆட்சியில் இருப்போம்.

கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் அணியினர் நாளை கூட வந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். அவர்கள் வருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. கோரிக்கைகள் இருப்பது நியாயம்தான். திறந்த மனதுடன் அதை பேசுவதன் மூலம் சரி செய்ய முடியும். கட்சி, ஆட்சி நலனுக்காக, எனது நிதி அமைச்சர் பதவியை, பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுக்க தயாராக உள்ளேன். அனைத்து எம்.எல்.ஏ-களுக்கும் அம்மாவின் சிறப்பான ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம்” என்றார்.

தம்பிதுரையும், விஜயபாஸ்கரும் எனக்கெதிராக செயல்படுகிறார்கள் – வெடிக்கும் செந்தில்பாலாஜி

Balaji2

கரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படாமல் தள்ளிப் போகும் விவகாரத்தை வைத்து செந்தில்பாலாஜி, தம்பிதுரை, அமைச்சர் விஜய்பாஸ்கர் தரப்பினர் வெளிப்படையாக மோதி வருகிறார்கள். செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில், கொண்டு வரப்பட்ட திட்டம் இது. ஆதலால், வாங்கல் குப்புச்சிப்பாளையம் அருகே 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அந்த இடத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், ‘செந்தில்பாலாஜிக்கு பெயர் கிடைக்கக்கூடாது’ என்று நினைத்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூலமாக தடுப்பதாகக் குமுறுகிறார்கள் செந்தில்பாலாஜி தரப்பினர். அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சணப்பிரட்டி அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்க முயற்சிப்பதாகவும் செந்தில்பாலாஜி தரப்பு குற்றம்சாட்டிவருகிறது. இதனால், குப்புச்சிப்பாளையம் பகுதியிலேயே அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 28-ம் தேதி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார் செந்தில்பாலாஜி. அதோடு, கரூர் நகர காவல்நிலையத்தில் போராட்ட அனுமதி கேட்டு கொடுத்த கடிதத்தில், தம்பிதுரையையும், அமைச்சர் விஜயபாஸ்கரையும் ஓப்பனாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடியாக அமைச்சர் விஜயபாஸ்கரும் செந்தில்பாலாஜிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று காலை (23-4-2017) வாங்கல் காமாட்சி மண்டபத்தில், செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, “தம்பிதுரை கரூர் தொகுதி எம்.பி-யாக மூன்று வருடங்களாக இருக்கிறார். ஆனால், கரூர் தொகுதிக்கு அவர் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரலை. ஆனால், நான் கொண்டு வந்த திட்டத்தையும் செயல்படுத்தவிடாம தடுக்கிறார். குப்புச்சிப்பாளையத்திலேயே மருத்துவக்கல்லூரியை அமைக்க வலியுறுத்தி முதல்வரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார். வரும் 28-ம் தேதிக்குள் குப்புச்சிப்பாளையத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், திட்டமிட்டப்படி வரும் 28-ம் தேதி உண்ணாவிரதம் தொடரும். தம்பிதுரையின் மக்கள் விரோதப்போக்கை அம்பலப்படுத்துவோம்” என்று அதிரடியாக பேசினார்.

தொடர்ந்து பேசியவர், “நான் அமைச்சராக இருந்தபோதுதான் எனது முயற்சியில் இந்த திட்டம் அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டது. அப்போது, அதற்காக வெளியிடப்பட்ட அரசாணையிலும் (அரசாணையை காண்பிக்கிறார்) குப்புச்சிப்பாளையத்தில்தான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அமைக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு அதற்காக 25 ஏக்கர் நிலம் தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டது. ஆனால், எனக்குப் பிறகு கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சராகவும் ஆன எம்.ஆர்.விஜயபாஸ்கர் நகராட்சியை மிரட்டி, ‘மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சணப்பிரட்டியில் அமைப்பதாக’ 2 முறை தீர்மானம் போட வைத்தார். ஆனால், ’15 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கும் சணப்பிரட்டி நகராட்சிக்கு சொந்தமான இடம், நகரத்தில் செயல்படுத்த இருக்கும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக உள்ளது என்பதால், அந்த இடத்தில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படமாட்டாது’ என்று 3-வது முறையாகத் தீர்மானம் போட்டது கரூர் நகராட்சி. அதன்பிறகு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக நாங்கள் பெற்ற தகவலிலும் மத்துவக்கல்லூரி மருத்துவமனை நாங்கள் பார்த்த குப்புச்சிப்பாளையம் பகுதியில் அமைய இருப்பதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. கரூர் மாவட்டம் முழுக்க உள்ள எல்லாப் பகுதிகளில் இருந்தும் வந்துபோவதற்கு குப்புச்சிப்பாளையம் பகுதிதான் தோதான இடம். சணப்பிரட்டிக்கு சரியான போக்குவரத்து வசதியே இல்லை.

அதோடு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்காக தம்பிதுரையும்,விஜயபாஸ்கரும் அடிக்கல் நாட்டியபோது, சணப்பிரட்டியில் அமைய இருக்கிறது என்றும் குறிப்பிடவில்லை. நான் கொண்டு வந்த திட்டம் இது. எனக்கு நல்ல பேர் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகவே இப்படி இடம் மாற்றி, திட்டத்தை அமைய விடாமல் தடுத்து வருகிறார்கள்.

விவசாயிகளுக்காக போராட்டம் நடத்த தி.மு.கவுக்கு தகுதி இல்லை – ராமதாஸ் காட்டம்

Ramadass2

தமிழக விவசாயிகள் பிரச்னைகள் குறித்தும், தி.மு.க வின் செயல்பாடுகள் குறித்தும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ஜப்தி நடவடிக்கைகளை கைவிட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், உயிரிழந்த உழவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உழவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அதுமட்டுமின்றி உழவர்களுக்குத் தேவையான உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், ஓர் ஊராட்சிக்கு ஒரு டிராக்டரை உழவுப் பணிகளுக்காக இலவசமாக வழங்க வேண்டும், உழவர்களின் விளைபொருட்களுக்கு போதிய விலை வழங்க வேண்டும், உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும், உழவர்கள் ஊதியக்குழு அமைக்க வேண்டும், தமிழகத்தின் பாசனப்பரப்பை விரிவுபடுத்தும் வகையில் நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தை செயல்படுத்த வேண்டும், உழவர்களுக்கு மானியத்துடன் கூடிய பயிர்க்கடன் வழங்க வேண்டும் என உழவர்கள் முன்வைக்காத கோரிக்கைகளுக்காகவும் பா.ம.க. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. உழவர்கள் நலனில் அக்கறைக் கொண்டவர்களைப் போலக் காட்டிக் கொள்ளும் தி.மு.கவும், அ.தி.மு.கவும் உழவர்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றியதில்லை.

ஆனால், எந்த அடிப்படையில் உழவர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், முழு அடைப்புப் போராட்டத்தையும் திமுக நடத்துகிறது என்பது தான் புரியவில்லை. காவிரிப் பிரச்சினைக்கு காரணமே திமுக தான். 1924-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட காவிரி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கத் தவறியதும், 1970-ம் ஆண்டுகளில் காவிரி துணை நதிகளின் குறுக்கே கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட 4 அணைகளை கர்நாடக அரசு கட்டியதை தடுக்கத் தவறியதும் திமுக அரசு தமிழக விவசாயிகளுக்கு செய்த துரோகங்களுக்கு உதாரணமாகும். ஹாரங்கி அணை கட்டுவது குறித்த பிரச்சினை ஏற்பட்ட போது காவிரிச் சிக்கலுக்குத் தீர்வு காணும் நோக்குடன் நடுவர் மன்றம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்று துரோகம் செய்ததும் கருணாநிதி தான். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு 05.02.2007 அன்று வெளியான நிலையில், அதன்பின் 2013-ஆம் ஆண்டு இறுதிவரை 6 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்குமா? என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்து விட்டு, அது பெரிய சர்ச்சையானவுடன் தெரியாமல் செய்து விட்டதாகக் கூறி வருத்தம் தெரிவித்த உழவர்களின் தோழன் யார்? என்பதை இந்த உலகமே அறியும்.

இத்தகைய கடந்த காலத்தைக் கொண்ட திமுகவுக்கு உழவர்களின் நலனுக்காக போராடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? ஒருவேளை கடந்த காலங்களில் உழவர்களுக்கு இழைத்த துரோகங்களுக்கு பரிகாரம் தேடுவதற்காகத் தான் அவர்களுக்கு ஆதரவாக போராட திமுக முன்வந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அதற்காக திமுக தேர்ந்தெடுத்துள்ள போராட்ட வடிவம் பயனளிப்பதை விட பாதிப்பையே ஏற்படுத்தும். ஒரு நாள் முழுவதும் கடைகளை அடைத்தும், போக்குவரத்தை தடை செய்தும் போராட்டம் நடத்தும் போது அதனால் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்பது ஒருபுறமிருக்க, அனைத்துத் தரப்பு மக்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி, முழு அடைப்புப் போராட்டங்களை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அதை மீறி போராட்டம் நடத்தினால், அதன்பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதிமன்றத்திடம் கோர முடியும். உழவர்களின் பெயரால் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள் உழவர்களைத் தான் தூற்றுவர் என்பதால் அவர்கள் தரப்பு நியாயம் அடிபட்டுவிடும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட இருப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 04.02.2009 அன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த போது, உச்சநீதிமன்றத் தீர்ப்பை காரணம் காட்டி அதற்கு அனுமதி அளிக்க அப்போதைய முதல்வர் கலைஞர் மறுத்து விட்டார். அதுமட்டுமின்றி அப்போதைய தலைமைச்செயலர் ஸ்ரீபதி சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மிரட்டும் தொனியில் கடிதம் அனுப்பப்பட்டது. தொப்புள்கொடி உறவுகளாக ஈழத்தமிழரை காப்பாற்றுவதற்கு முழு அடைப்பு நடத்த அனுமதி மறுத்த ஒரு கட்சி, இப்போது உழவர்கள் நலனுக்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி போராட்டம் நடத்தப்போவதாகக் கூறுவதற்கு பெயர் தான் சந்தர்ப்பவாதம்.

உழவர்களின் கோரிக்கைக்கான அனைத்து அறவழிப் போராட்டங்களையும் பா.ம.க. ஆதரிக்கிறது. மாறாக பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயனற்ற போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது, அரசியல் அணி திரட்டும் முயற்சியே தவிர, உழவர்களின் நலன் சார்ந்தது அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது. எனவே, இந்த போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், பாட்டாளி தொழிற்சங்கமும் பங்கேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, இத்தகைய போராட்டங்களைத் தவிர்த்து மக்களுக்கு பாதிப்பற்ற வகையிலான போராட்ட வடிவத்தை கையில் எடுக்கும்படி அனைத்து கட்சிகளையும் பாட்டாளி மக்கள் கட்சி நட்புடன் கேட்டுக்கொள்கிறது’ என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

‘தெர்மாக்கோல்’ புகழ் பொதுப்பணித்துறை பொறியாளர் முத்துபாண்டி பணியிட மாற்றம்

raju2

தேனி மாவட்டத்தில் வைகை நதியின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 71 அடி உயரம் கொண்டது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தற்போது 21 அடி வரையில் தண்ணீர் மட்டம் இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து தான் மதுரை மற்றும் தேனி மாவட்டத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. வைகை அணையில் நிரம்பியிருக்கும் தண்ணீர் வெயிலில் ஆவியாவதை தடுக்க ஒரு பரிச்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் சேர்ந்து ஒரு திட்டத்தை முடிவு செய்தனர்.

தண்ணீரின் மேற்பரப்பில் தெர்மாக்கோல் அட்டைகளை மிதக்கவிடுவது என்று முடிவு செய்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெர்மாக்கோலை மிதக்க வைக்க முயற்சித்தனர். ஆனால் நீரின் இயக்கத்தில் தெர்மாக்கோல்கள் கரை ஒதுங்கின. அதனால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.

இந்தச் சம்பவம் பெரும் நகைப்புக்குரிய ஒன்றாக ஆனது. அமைச்சர் செல்லூர் ராஜூவை நெட்டிசன்கள் இணையத் தளங்களில் வறுத்து எடுத்து விட்டனர். விக்கிப்பீடியாவில் செல்லூர் ராஜூவின் பெயரை ‘தெர்மாக்கோல் சயின்டிஸ்ட்’ என்று குறிப்பிடும் அளவிற்கு கலாய்த்தனர்.

இந்த நிலையில் தெர்மாக்கோலை மிதக்கவிட திட்டம் தீட்டிய பொதுப்பணித்துறை பொறியாளர் முத்துபாண்டி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நமது நிருபர் விசாரித்தபோது, ‘இது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் வழக்கமான பணியிட மாற்றம் தான். அவருடன் சேர்த்து 200-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பே பணியிட மாற்றம் முடிவு எடுக்கப்பட்டது’ என்று தகவல் கிடைத்துள்ளது.

கோடிக்கணக்கில் பண மோசடி புகார்: தீபாவிடம் போலீஸ் விசாரணை

Deepa

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபா, ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா’ என்றபேரவையை தொடங்கினார். இதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்ததில் அவருக்கும் அவர் கணவர் மாதவனுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் அவரது கணவர் கடந்த சில நாள்களுக்கு முன் புது கட்சி துவங்கினார்.

இந்நிலையில், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர், விண்ணப்பப் படிவம் பெற, தீபா பணம் வசூலித்ததாகவும், பேரவை அங்கீகாரம் ரத்தானதை மறைத்து, தீபா பணம் வசூலித்து வருவதாகவும், கடந்த சில நாள்களுக்கு முன் போலீஸில் புகார் அளித்தார். குறிப்பாக, 20 கோடி ரூபாய் வரை அவர் பண மோசடியில் ஈடுபட்டதாக ஜானகிராமன் புகாரில் கூறி இருந்தார்.

மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக மாம்பலம் போலீஸார், தீபாவிடம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, “புகார் அளித்தவர் யார் என்றே எனக்கு தெரியாது. இரண்டு காவலர்கள் என் வீட்டுக்கு வந்து விட்டு சென்றுள்ளனர். விடுமுறை தினத்தன்று அவர்கள் வர வேண்டிய அவசியம் என்ன?. போலீஸ் என்னிடம் நேரடியாக விசாரணை நடத்தவில்லை. தவறான புகாரின் அடிப்படையில் காவலர்கள் வந்தனர். அரசியலில் இருந்து என்னை விரட்ட சதி நடக்கிறது. சசிகலா குடும்பம் அ.தி.மு.க-வை விட்டு விலகவில்லை. இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக நாடகம் நடத்துகின்றனர்.

சசிகலா குடும்பத்தின் வழிநடத்தல்படியே அ.தி.மு.க இயங்குகிறது. இந்த ஆட்சி கலைக்கப்பட்டு, தமிழகத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அ.தி.மு.க-வில் இருந்து யார் அழைப்பு விடுத்தாலும் செல்ல மாட்டேன் என் கணவர் கூறியதாக வதந்திகள் பரப்பப்படுகிறது” என்றார்.

கில்லி கதை உருவான கதை தெரியுமா? #13YearsofGhilli

Ghilli5

எந்த ஹீரோவுக்கும் காலத்துக்கும் சொல்லிக் கொள்கிற மாதிரியான ஒரு ஹிட் அமைவது… அவ்வளவு சுலபமில்லை. கில்லியில் விஜய்க்கு அமைந்தது அந்த ஹிட். இரண்டு மாதத்திகுள்ளாகவே எந்தப் புதுப் படமாக இருந்தாலும் டிவியில் போட்டுவிடும் சூழல் இது. ஆனால் கில்லி ரிலீஸ் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் டிவியில் ஒளிப்பரப்பானது. அந்த அளவுக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட். அந்தப் படம் வெளியாகி இன்றோடு பதிமூன்று வருடங்கள் ஆகிறன. இரண்டில் எது பெஸ்ட், யார் பெஸ்ட் என்பதெல்லாம் தவிர்த்து, கில்லிக்குப் பின்னாலும், ஒக்கடு கதை உருவானதுக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யம் உண்டு. அதைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.

vijay2அப்போது தான் உதயா படம் வெளிவந்து தோல்வியடைந்திருந்த நேரம். விஜய்க்கு மிகப் பெரிய வெற்றி தேவை. அப்படியே 2003 ஜனவரியை ஜும் செய்து பார்த்தால், தெலுங்கில் சங்கராந்தி (பொங்கல்) ரிலீஸாக வந்து மிகப்பெரிய ஹிட்டாகியிருந்தது ‘ஒக்கடு’. அந்தப் படத்திற்கு முன்பு மகேஷ் பாபு நடித்த ‘பாபி’ படம் தோல்வியடைந்திருந்தது.

அதிலிருந்து அவரை பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றது ‘ஒக்கடு’. அது விஜய்க்கு தெரிந்திருந்ததோ என்னவோ. இவ்வளவுக்கும் அப்போது ‘உதயா’ ரிலீஸ் ஆகியிருக்கவில்லை. ‘ஒக்கடு’ பார்த்த விஜய் அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் விரும்பினார். அது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் காதுகளை எட்ட, இயக்குநர் தரணி, இசை வித்யாசாகர், ஒளிப்பதிவு கோபிநாத், நாயகி த்ரிஷா என சடசடவென அத்தனையும் முடிவானது. இயக்குநர் தரணி அப்போது தில், தூள் என அதிரி புதிரியாக இரண்டு ஹிட்களைக் கொடுத்திருந்தார்.

பக்கா டீம் செட் ஆகியிருந்தது. ரமணா இயக்கத்தில் நடித்த ‘திருமலை’ படத்தின் ஷூட்டை முடித்துவிட்டு 2003ன் மத்தியில் ‘கில்லி’ படத்தைத் துவங்கினார்கள். சரியாக ‘கில்லி’ படப்பிடிப்பு முடியவும், சில நாளிலேயே ‘உதயா’ வெளியாகவும் சரியாக இருந்தது. உதயா பெரிய வரவேற்பைப் பெறாததால் விஜய் ரசிகர்களுக்கும், விஜய்க்கும் இருந்தது பசி இல்லை வெறி; வெறித்தனமான ஒரு ஹிட் வர வேண்டும் என்ற வெறி. அதற்காக ஒவ்வொரு சீனிலும், வசனத்திலும், சண்டைக்காட்சியிலும் மாஸ் ஏற்றியிருந்தார் தரணி.

இப்போது இங்கு இன்டர் கட் வைத்து, ‘கில்லி’யின் ஒரிஜினல் ஒக்கடு உருவான கதையைப் பார்க்கலாம். சென்னை மெட்ராஸாக இருந்த நேரம் அது. அப்போது குணசேகர் என்கிற ஒரு உதவி இயக்குநர் ஹைதராபாத்தின் சார்மினார் பின்னணியில் ஒரு கேங்ஸ்டர் படத்தை எடுக்க வேண்டும் என்ற கனவுகளில் மிதந்து கொண்டிருந்தார். சில வருடங்கள் கழித்து, அதாவது உதவி இயக்குநராக இருந்த குணசேகர், மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்தே படம் எடுத்திருந்த இயக்குநர் குணசேகர் ஆகிய பிறகு. 2001ல் பேட்மிட்டன் வீரர் புலேலா கோபிசந்தின் பேட்டி ஒன்றில், தன் தந்தையை எதிர்த்து பேட்மிட்டன் விளையாடியதையும், கப்களை மறைத்து வைத்ததையும் சொல்லியிருப்பதைப் பார்க்கிறார்.

vijay3பேட்மிட்டனை கபடியாக மாற்றி ஒரு கதையைத் தயார் செய்கிறார். முதலில் அதில் நடிக்க சொல்லி பவர்ஸ்டார் பவன்கல்யாணிடம் செல்கிறார் குணசேகர். ஆனால், பவன் மறுத்துவிடுகிறார். காரணம் சிரஞ்சீவியை வைத்து குணசேகர் எடுத்த ‘மிருகராஜூ’ தோல்வியடைந்திருந்தது. அடுத்து அவர் சென்றது மகேஷ் பாபுவிடம். அவர் ஓகே சொல்ல, துவங்கியது ஷூட். படம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. மகேஷின் கெரியரில் முதல் ஹிட் ‘முராரி’ என்றால் முதல் ப்ளாக்பஸ்டர் ‘ஒக்கடு’. இந்தப் படத்துக்குப் பிறகு மகேஷுக்கு என தனியாக உருவான ரசிகர் வட்டம் மிகப் பெரியது.

வித்யா பாலன், திரிஷா, அதிதி ராவ்.. இவங்களுக்கு டப்பிங் பேசிய கிருத்திகா யார் தெரியுமா?

Karthi

”எலெக்ட்ரானிக் மீடியா படிச்சேன். அப்புறம் ரேடியோ, டி.வி.னு சில வருடங்கள் வேலை. இப்போ பெங்களூர்ல முன்னணி மீடியா ஏஜென்சியில கன்டென்ட் ஹெட்டா இருக்கேன். ‘கோ’ படத்துல பியாவுக்கு டப்பிங் பேச எந்த வாய்ஸும் செட் ஆகலை. ‘நான் பேசட்டுமா’னு விளையாட்டா கேட்டேன்.

‘ட்ரை பண்ணிப் பார்’னு சொன்னாங்க. என் வாய்ஸ் பியாவுக்கு ஓகே ஆயிடுச்சு. அடுத்தடுத்து ‘உருமி’ (வித்யா பாலன்), ‘ஆதிபகவன்’ (நீது சந்திரா), ‘கடல்’ (துளசி), ‘ஒருநாள் கூத்து’ (மியா ஜார்ஜ்), ‘என்னை அறிந்தால்’, ‘அரண்மனை 2’, ‘நாயகி’ (த்ரிஷா), தொடர்ந்து ‘காற்று வெளியிடை’ வரைக்கும் வந்திருக்கு…” என்றவர், தொடர்கிறார்.

Krupika”மணி சார் கூட வொர்க் பண்ணணும்ங்கிறது எல்லாரோட கனவா இருக்கும். எப்போதும் ஒரு ஸ்மைலோட சிம்பிளா இருப்பார். நல்லா பண்ணிட்டோம்னா மனசார பாராட்டுவார். ‘கடல்’ படத்துல ஒரு சீன்ல நான் குரல்ல சரியா எமோஷன்ஸ் காட்டலை. டேக் மேல டேக் போயிட்டிருந்தது. மணி சார் எதிர்பார்த்த எமோஷன்ஸ் வரலை. அவர் டப்பிங் ரூமுக்குள்ள வந்து, ‘ஏன் என்னாச்சு… என்னவோ தயக்கத்தோட இருக்கியே… நீ குரலால நடிக்கணும். கை கால்களை ஆட்டணும். குதிக்கணும்… அதுல சத்தம் வருமேனு எல்லாம் கவலைப்படாதே. அது சவுண்ட் இன்ஜினியர் பிரச்னை. எதிர்பார்த்த எமோஷன்ஸ் வர்றதுக்கு என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் நீ பண்ணு’னு சொன்னார்.

அந்தக் கணம் எனக்குள்ள எல்லாமே மாறினது. டப்பிங் என்பது வெறுமனே குரல் கொடுக்கிறது மட்டுமில்லை. நானும் நடிக்கணும்னு உணர வெச்சார் மணி சார். அன்னைக்கு அவர் பக்கத்துல உட்கார்ந்து டீ குடிச்சேன். அந்த நிமிஷத்தை என்னால மறக்கவே முடியாது. அது ஒருமாதிரியான சிலிர்ப்பு. அந்த சிலிர்ப்பே இன்னும் அடங்கலை. அதுக்குள்ள மணி சாரோட அடுத்த படத்துக்கு அழைப்பு. அதுதான், ‘காற்று வெளியிடை’ வாய்ப்பு.” என்றவர், அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

” ‘காற்று வெளியிடை’ படத்துல ஹீரோயின் அதிதி ராவுக்கு டப்பிங் பேசினேன். ‘நாங்க சில குரல்களை ட்ரை பண்ணினோம். எதுவுமே திருப்தியா இல்லை… நீங்க வந்து பேசுங்க’னு சொன்னாங்க. வந்தேன். பேசினேன். மணி சார் உடனே ஓகே பண்ணிட்டார். என்னால அவங்க கூப்பிட்டபோதெல்லாம் வந்து பேச முடியாம இருந்திருக்கு. ஆனாலும் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணினாங்க. படத்துல ‘நான் ஏன் திரும்பத் திரும்ப உன்கிட்ட வரேன்’னு அதிதி, கார்த்திகிட்ட கேட்கற மாதிரி ஒரு சீன் வரும். பார்க்கிறவங்களுக்குத்தான் அது வெறும் சீன்.

Krupikaடப்பிங் பேசினபோது அந்தக் காட்சியில அவங்க ரெண்டுபேருக்கும் இடையிலான அந்தக் காதல்ல இருந்த வலியை நான் உணர்ந்தேன். எனக்கு அது ரொம்பவே ஸ்பெஷலான சீனும்கூட. ரொம்ப முக்கியமான காட்சிகளுக்கு மட்டும் மணி சார் டப்பிங்கின் போது இருப்பார். இந்த சீன்லயும் இருந்தார். அழுகையில ஆரம்பிச்சு, கோபத்துக்குள்ள போய், ஹெல்ப்லெஸ்னெஸ்ல முடிஞ்சு, விரக்திக்குப் போற மாதிரி ஏகப்பட்ட உணர்ச்சிகளை உள்ளடக்கின சீன் அது. அத்தனை எமோஷன்ஸையும் காட்டிப் பேச வேண்டியிருந்தது. அந்த சீன் பேசி முடிச்சபோது எனக்கு கண்ணீர் வந்திருச்சு. அந்த சீன்ல நான் நல்லா பேசியிருக்கேன்னு மணி சார் பாராட்டினதும் மறக்க முடியாதது.

கிருத்திகாநான் சாதாரணமா பேசுற குரலுக்கும் டப்பிங் பேசுற குரலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குனு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்வாங்க. குறிப்பிட்ட ஒரு கேரக்டருக்கு டப்பிங் பேசும்போது அவங்களோட பாடிலாங்குவேஜூக்கு நம்மளை அறியாமலே போயிடுவோம். அதிதியோட வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கும். பிரமாதமான பாடகி. அவங்களோட குரலோட மேட்ச் பண்ற சேலஞ்ச் எனக்கு இருந்தது. ரெண்டு, மூணு சீன்ல அவங்க பாடியிருப்பாங்க.

அங்கெங்ல்லாம் நானும் பாடவேண்டியிருந்தது. பேசறது வேற… பாடறது வேற… எனக்கு சாங்ஸுக்கான டிராக்கையும் முதல் நாளே அனுப்பிட்டாங்க. நான் அதுவரைக்கும் பாட்டுக்கு டப்பிங் பண்ணினதில்லை. எனக்கும் சங்கீதம் தெரியும்ங்கிற அடிப்படையில அதிதியைத் திருப்திப்படுத்துற அளவுக்குப் பாடியிருக்கேன்னு நினைக்கிறேன்.” அதிதி மாதிரியே அழகாகப் பேசுகிறவருக்கு, படத்தின் பல காட்சிகள் உலகம் மறக்கச் செய்தனவாம்.

”என் வேலை டப்பிங் பேசறது. ஆனா மணிசார் படத்துல கேமரா அழகு பத்திச் சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு சீனும் அவ்வளவு அழகா இருக்கும். ஒரு சீன்ல முழுக்க வெண்பனி மூடியிருக்கிற மாதிரியான ஒரு ஏரியா. கிட்டத்தட்ட ‘ரோஜா’ படத்தை ஞாபகப்படுத்தும். அதுல நிறைய டேக் வாங்கினேன். அந்தக் காட்சியோட அழகைப் பார்த்துட்டு, என்னையே மறந்துட்டேன். டப்பிங் பேசறதையும் மறந்துட்டு அந்த இடத்தோட அழகுல மூழ்கிட்டேன். அதுலேருந்து வெளியில வந்து சுதாரிச்சுக்கிட்டுப் பேசறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு…” எனச் சிரிக்கிறார் கிருத்திகா.

”காற்று வெளியிடை’ படம் பண்ணாமப் போயிருந்தேன்னா ரொம்ப வருத்தப்பட்டிருப்பேன். என் டப்பிங் கேரியர்லயே இது ரொம்ப ஸ்பெஷல் படம். மணிரத்னம் சார் மாதிரியான ஒருத்தர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பெங்களூர்லேருந்து வந்து வாரா வாரம் பேசிட்டுப் போகறதுக்காக வெயிட் பண்ணணும்னு எந்த அவசியமும் இல்லை. அதையும் தாண்டி அவருக்கு என் திறமையில ஒரு நம்பிக்கை இருந்ததா நம்பறேன். அதே நேரம் தொடர்ந்து இதையே என் முழுநேர வேலையா எடுத்துக்கிற ஐடியா இப்போதைக்கு இல்லை.

எனக்கு மீடியாவுல பெரிய கனவுகள் இருக்கு. ஆனா அதுக்கான சரியான வாய்ப்புகள் சென்னையில கிடைக்கலை. பெங்களூர்ல இப்போ நான் பார்த்துக்கிட்டு இருக்கிற வேலை ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு எப்போதும் நாலஞ்சு விஷயங்கள் பண்ணிட்டிருக்கணும். பாடப் பிடிக்கும். டப்பிங் பேசுறேன். எழுதுறேன். ‘யுகேலேலே’னு ஒரு இசைக்கருவி வாசிக்கக் கத்துக்கிட்டிருக்கேன்.” ஸ்மைலியுடன் சைன் ஆஃப் செய்கிறார்.

சரி.. கிருத்திகா நெல்சன் யார்? இரட்டை எழுத்தாளர்கள் சுபா இணையில், சுரேஷின் மகள். ‘ஒருநாள் கூத்து’ இயக்குநர் நெல்சனின் காதல் மனைவி.

இறுதிச்சுற்று… சாலா கதூஸ்… இப்போது குரு! – மூன்று மொழியிலும் ஹிட்டடிக்க என்ன காரணம்?

Aadhi2

இப்போது தெலுங்கில் வெளியாகியிருக்கும் குரு மூன்றுமே வெவ்வேறு மொழிகளில் உருவான ஒரே படம் தான். மூன்றுக்கும் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் தமிழ் மற்றும் இந்தியில் தனுஷ் ரசிகையாக வரும் ரித்திகா, தெலுங்கில் பவன் கல்யாண் ரசிகையாக வருகிறார். மீண்டும் ரீமேக்கிற்கும் விமர்சனம் எழுதி போர் அடிக்காமல், மூன்று மொழிகளிலும் படத்தை வலுவாக்கிய, பொதுவான ஐந்து விஷயங்கள் பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம்.

கதை:

மதிக்குள் இருக்கும் பாக்ஸரை அடையாளம் காண்கிறார் பயிற்சியாளர் பிரபு. எப்படியாவது மதியை மகளிர் குத்துச்சண்டை போட்டியில் ஜெயிக்க வைத்து அதன் மூலம் பல பெண்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பது பிரபுவின் கனவு. விளையாட்டுத் துறைக்குள் இருக்கும் அரசியலுக்கும், ஈகோவுக்கும் நடுவே இது எப்படி நடக்கிறது என்பது தான் மையக்கதை. இந்த அடிப்படைக் கதையில் எந்த மாற்றமும் இல்லை.

பிரபு அல்லது ஆதி மாஸ்டர் :

Guruதன் லட்சியத்துக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கும் கோச். அது, தான் மிகவும் நேசிக்கும் குத்துச்சண்டை பயிற்சியாளர் பதவியாக இருந்தாலும் சரி, தனக்குக் கிடைக்கப் போகும் புகழாக இருந்தாலும் சரி. தமிழ் – இந்தியில் மாதவன், தெலுங்கில் வெங்கடேஷ் இருவரும் எந்த இடத்திலும் மாதவனாகவோ, வெங்கடேஷாகவோ தெரியாமல் மாஸ்டராக தெரிய வைத்ததில் இருக்கிறது இயக்குநரின் உழைப்பு. மாதவன் இதில் ஈடுபாடுடன் உழைத்தது சாதாரணம். ஆனால், வெங்கடேஷ் திரைக்கதை கேட்கும் கதாபாத்திரத்தில் தன்னை ஒப்படைப்பது சாதாரண மேட்டர் கிடையாது. வெங்கடேஷுக்கு இதற்கு முன் அது அமைந்ததும் கிடையாது. எனவே இந்த முறை தன் ஸ்டைல் எதுவும் இல்லாமல், தன் வயதைப் பளிச் எனக் காட்டிவிடும் கதாபாத்திரமாக இருந்தும் தயங்காமல் செய்திருந்தார். மாதவனுக்கு முன்பு இந்தக் கதை சென்றது வெங்கடேஷுக்குத் தான் என்பது கூடுதல் தகவல்.

மதி மற்றும் ராமுடு என்கிற ராமேஷ்வரி:

படத்தில் இந்த ரோலும் ஒரு சிறப்பான கதாபாத்திர வடிவமைப்பிற்கான உதாரணம். தனக்கு என்ன வேண்டும் என தீர்மானம் இல்லாத பெண், தானாக வரும் ஸ்பெஷலான வாய்ப்பை உருட்டி விளையாடுவதும், பின்பு வெற்றி பெறத் துடிப்பது, தந்தை வயதுள்ள கோச் மீது வரும் ப்ரியம், அதை தைரியமாக வெளிப்படுத்தும் விதம் என இந்த கதாபாத்திரத்தை இயக்குநர் எழுதிய விதமும், அதை ரித்திகா சிங் அப்படியே திரையில் வெளிப்படுத்தியதும் மிக நேர்த்தி. கூடவே ரித்திகா சிங் நிஜத்தில் பாக்ஸிங் தெரிந்தவர் என்பதும் இன்னொரு ப்ளஸ்.

ஸாகீர் ஹுசைன், மும்தாஸ் (லக்ஸ்), நாசர், ராதாரவி:

பாக்ஸிங் கமிட்டி தலைவராக வரும் ஸாகீர் ஹுசைன் நாயகனுக்கு செக் வைக்கும் போதும், பிரச்னை தரும் போதும் ஆடியன்ஸுக்கு வரும் எரிச்சல், கடைசியில் நாயகி பாக்ஸிங்கில் ஜெயிக்கும் பொழுது சிலிர்ப்பாக கன்வெர்ட் ஆகும். இன்னும் சொல்லப் போனால் இந்த இருவருக்குமான ஈகோ மட்டுமே தனி ஸ்க்ரிப்டுக்கானது.

Guru2அந்த அளவுக்கு ஆழமாக காட்டப்படவில்லை என்றாலும், தன் தங்கை தன்னைவிட பெட்டர் பாக்ஸர் ஆகிறாள் என்னும் பொறாமை மனதிற்குள் வைத்துக் கொண்டு லக்ஸாக நடித்த மும்தாஸ். அவ்வப்போது கொடுத்த ரியாக்‌ஷன்களும் வேற லெவல். உறுதுணைக் கதாபாத்திரங்களாக வரும் ஜூனியர் கோச் நாசர், பாக்ஸிங் கமிட்டி மெம்பர் ராதாரவி / எம்.கே.ரய்னா / தனிகெல்ல பரணி இவர்களும் தங்களின் சீறிய பங்களிப்பை சரியாக கொடுத்திருப்பார்கள்.

சந்தோஷ் நாராயணன்:

படத்தை முழுக்க முழுக்க ரசிகனோடு ஒன்ற வைத்ததில் சந்தோஷ் நாராயணன் இசைக்கு பெரும் பங்குண்டு. டிரெய்லரில், ‘சண்டக்காரா’ பாடலில், ‘தேடிக் கட்டிக்கப் போறேன்’ வரிகள் வரும் போது, பாக்ஸிங் பன்ச்களை வைத்து சவுண்ட் மிக்சிங் செய்யப்பட்டிருக்கும். சவுண்ட் இன்ஜினியர் அப்படி செய்தது போல, மற்றவர்களுக்கும் சந்தோஷ் நிறைய இடங்களில் ஸ்பேஸ் கொடுத்திருப்பார். குறிப்பாக க்ளைமாக்ஸில் வரும் பாக்ஸிங் காட்சியில். இந்த இடைவெளி படத்தின் மற்ற விஷயங்களுக்கு வழிவிட்டு இருக்கும். புரிதலுக்கு மேலே இருக்கு டீசரின் சவுண்டிங்கை கேட்கலாம்.

மக்கள் சூப்பர்ஸ்டார் தெரியும், நேச்சுரல் ஸ்டார், கோல்டன் ஸ்டார் எல்லாம் தெரியுமா?

Nagarjuna2

முன்னொரு காலத்தில் ஒரு ட்ரெண்ட் இருந்தது. ரெண்டு படம் நடிச்சு முடிச்சதும் பேருக்குப் முன்னால சோலார் ஸ்டார், நெப்ட்யூன் ஸ்டார், ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்னு பட்டம் போட்டுக்கறது. சமீபத்தில் மக்கள் சூப்பர்ஸ்டார் சர்ச்சையானதை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்ல மக்கள் செல்வன் வரைக்கும் பார்த்தாச்சு. மற்ற எல்லா மொழிகளும் லிஸ்டு பெருசா நீளும். இப்போதைக்கு தெலுங்கு கன்னடத்தில் மட்டும் யாருக்கு என்ன பேரு?னு ஒரு லுக் விடலாம்.

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண், ‘ப்ரின்ஸ்’ மகேஷ் பாபு இதெல்லாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இவங்களுடைய பெயர் எல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்களா?telugu

யங் டைகர் – ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர் படம் முழுக்க ஃபைட்டர்ஸ பறக்கவிட்ட சமயத்தில் உதயமானது தான் இந்தப் பெயர்.

யங் ரெபல் ஸ்டார் – பிரபாஸ்

பிரபாஸ் படத்தை விட ஃபைட் சீன்களை ரசிக்க கூட்டம் வந்த கதை எல்லாம் உண்டு. பின்னால ‘ரெபல்’னு டைட்டில் வெச்ச படத்தில் கூட நடிச்சார். கன்னடத்தில் ஒரு ரெபல் ஸ்டார் இருக்கதால, நாம யங் ரெபல் ஸ்டார் ஆகிட்டோம்.

ஸ்டைலிஷ் ஸ்டார் – அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜுனுடைய முதல் நான்கு படங்கள விட்டுட்டு பார்த்தீங்கன்னா எதுக்காக இந்த பேருன்னு தெரியும். ஒவ்வொன்னுலையும் ஹேர்ஸ்டைல், ட்ரெஸ்ஸிங் ஸ்டைல்னு எதை எடுத்தாலும் ஸ்டைல் தான்.
telugu

மெகா பவர் ஸ்டார் – ராம் சரண்

சிம்பிள், அப்பாகிட்ட ‘மெகா’வையும், சித்தப்பாகிட்ட ‘பவர் ஸ்டார்’ஐயும் எடுத்து கோர்த்தா மெகா பவர் ஸ்டார் ரெடி.
telugu

கிங் – நாகர்ஜுனா

கமர்ஷியல், பயோகிராபிகல், காமெடி, ரொமான்ஸ்னு எல்லாத்திலும் பூகுந்து விளையாடுவார். எல்லாமே சக்சஸ் ஆகறதால இந்தப் பெயரா இருக்கலாம்.