பன்னீர்செல்வத்துக்கு நிதி அமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பேன் – ஜெயக்குமார்

jayakumar2

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சேத்துப்பட்டு ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சேத்துப்பட்டு ஏரி மொத்தம் 17 ஏக்கர் நிலம். இந்த பகுதி மக்கள் பயன்படுத்தாத வகையில் இருந்தது. ரூ. 43 கோடியில் மக்கள் பயன்பாட்டிற்கு சுற்றுலாத்தலமாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் சேத்துப்பட்டு ஏரி மேம்படுத்தப்பட்டது. இதனால், தற்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி 2,000 முதல் 3,000 ஆயிரம் பேர் வருகின்றனர். மாதத்துக்கு 12,000 பேர் வருகின்றனர்.

இரண்டாம் கட்டமாக, ரூ. 6 ஆயிரம் கோடி செலவில் விர்சுவல் ரியாலிட்டி தியேட்டர் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் சேத்துப்பட்டு ஏரி மற்றும் மீனவர்கள் நடவடிக்கைகளை காண முடியும். மாணவர்களுக்கு கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த கடல்வாழ் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அதில் அரிய வகை மீன்கள் வளர்க்கப்படும். மேலும், பொது மக்களின் கருத்துகளை கேட்டு, அவர்களுக்கு தேவையானவை செய்யப்படும்.

17 ஆண்டுகள் தி.மு.க, மத்தியில் கூட்டணி இருந்தது. அப்போது, எதுவுமே செய்யாமல், இப்போது அ.தி.மு.க-வை குற்றம் சாட்டுவது சரியில்லை. அ.தி.மு.க ஆட்சி கவிழும் என்று தி.மு.க பகல் கனவு காண்கிறது. ஆறு மாதம் இல்லை அறுபது ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது. நாங்கள்தான் ஆட்சியில் இருப்போம்.

கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் அணியினர் நாளை கூட வந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். அவர்கள் வருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. கோரிக்கைகள் இருப்பது நியாயம்தான். திறந்த மனதுடன் அதை பேசுவதன் மூலம் சரி செய்ய முடியும். கட்சி, ஆட்சி நலனுக்காக, எனது நிதி அமைச்சர் பதவியை, பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுக்க தயாராக உள்ளேன். அனைத்து எம்.எல்.ஏ-களுக்கும் அம்மாவின் சிறப்பான ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம்” என்றார்.

தம்பிதுரையும், விஜயபாஸ்கரும் எனக்கெதிராக செயல்படுகிறார்கள் – வெடிக்கும் செந்தில்பாலாஜி

Balaji2

கரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படாமல் தள்ளிப் போகும் விவகாரத்தை வைத்து செந்தில்பாலாஜி, தம்பிதுரை, அமைச்சர் விஜய்பாஸ்கர் தரப்பினர் வெளிப்படையாக மோதி வருகிறார்கள். செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில், கொண்டு வரப்பட்ட திட்டம் இது. ஆதலால், வாங்கல் குப்புச்சிப்பாளையம் அருகே 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அந்த இடத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், ‘செந்தில்பாலாஜிக்கு பெயர் கிடைக்கக்கூடாது’ என்று நினைத்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூலமாக தடுப்பதாகக் குமுறுகிறார்கள் செந்தில்பாலாஜி தரப்பினர். அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சணப்பிரட்டி அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்க முயற்சிப்பதாகவும் செந்தில்பாலாஜி தரப்பு குற்றம்சாட்டிவருகிறது. இதனால், குப்புச்சிப்பாளையம் பகுதியிலேயே அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 28-ம் தேதி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார் செந்தில்பாலாஜி. அதோடு, கரூர் நகர காவல்நிலையத்தில் போராட்ட அனுமதி கேட்டு கொடுத்த கடிதத்தில், தம்பிதுரையையும், அமைச்சர் விஜயபாஸ்கரையும் ஓப்பனாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடியாக அமைச்சர் விஜயபாஸ்கரும் செந்தில்பாலாஜிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று காலை (23-4-2017) வாங்கல் காமாட்சி மண்டபத்தில், செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, “தம்பிதுரை கரூர் தொகுதி எம்.பி-யாக மூன்று வருடங்களாக இருக்கிறார். ஆனால், கரூர் தொகுதிக்கு அவர் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரலை. ஆனால், நான் கொண்டு வந்த திட்டத்தையும் செயல்படுத்தவிடாம தடுக்கிறார். குப்புச்சிப்பாளையத்திலேயே மருத்துவக்கல்லூரியை அமைக்க வலியுறுத்தி முதல்வரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார். வரும் 28-ம் தேதிக்குள் குப்புச்சிப்பாளையத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், திட்டமிட்டப்படி வரும் 28-ம் தேதி உண்ணாவிரதம் தொடரும். தம்பிதுரையின் மக்கள் விரோதப்போக்கை அம்பலப்படுத்துவோம்” என்று அதிரடியாக பேசினார்.

தொடர்ந்து பேசியவர், “நான் அமைச்சராக இருந்தபோதுதான் எனது முயற்சியில் இந்த திட்டம் அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டது. அப்போது, அதற்காக வெளியிடப்பட்ட அரசாணையிலும் (அரசாணையை காண்பிக்கிறார்) குப்புச்சிப்பாளையத்தில்தான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அமைக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு அதற்காக 25 ஏக்கர் நிலம் தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டது. ஆனால், எனக்குப் பிறகு கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சராகவும் ஆன எம்.ஆர்.விஜயபாஸ்கர் நகராட்சியை மிரட்டி, ‘மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சணப்பிரட்டியில் அமைப்பதாக’ 2 முறை தீர்மானம் போட வைத்தார். ஆனால், ’15 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கும் சணப்பிரட்டி நகராட்சிக்கு சொந்தமான இடம், நகரத்தில் செயல்படுத்த இருக்கும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக உள்ளது என்பதால், அந்த இடத்தில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படமாட்டாது’ என்று 3-வது முறையாகத் தீர்மானம் போட்டது கரூர் நகராட்சி. அதன்பிறகு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக நாங்கள் பெற்ற தகவலிலும் மத்துவக்கல்லூரி மருத்துவமனை நாங்கள் பார்த்த குப்புச்சிப்பாளையம் பகுதியில் அமைய இருப்பதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. கரூர் மாவட்டம் முழுக்க உள்ள எல்லாப் பகுதிகளில் இருந்தும் வந்துபோவதற்கு குப்புச்சிப்பாளையம் பகுதிதான் தோதான இடம். சணப்பிரட்டிக்கு சரியான போக்குவரத்து வசதியே இல்லை.

அதோடு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்காக தம்பிதுரையும்,விஜயபாஸ்கரும் அடிக்கல் நாட்டியபோது, சணப்பிரட்டியில் அமைய இருக்கிறது என்றும் குறிப்பிடவில்லை. நான் கொண்டு வந்த திட்டம் இது. எனக்கு நல்ல பேர் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகவே இப்படி இடம் மாற்றி, திட்டத்தை அமைய விடாமல் தடுத்து வருகிறார்கள்.

விவசாயிகளுக்காக போராட்டம் நடத்த தி.மு.கவுக்கு தகுதி இல்லை – ராமதாஸ் காட்டம்

Ramadass2

தமிழக விவசாயிகள் பிரச்னைகள் குறித்தும், தி.மு.க வின் செயல்பாடுகள் குறித்தும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ஜப்தி நடவடிக்கைகளை கைவிட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், உயிரிழந்த உழவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உழவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அதுமட்டுமின்றி உழவர்களுக்குத் தேவையான உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், ஓர் ஊராட்சிக்கு ஒரு டிராக்டரை உழவுப் பணிகளுக்காக இலவசமாக வழங்க வேண்டும், உழவர்களின் விளைபொருட்களுக்கு போதிய விலை வழங்க வேண்டும், உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும், உழவர்கள் ஊதியக்குழு அமைக்க வேண்டும், தமிழகத்தின் பாசனப்பரப்பை விரிவுபடுத்தும் வகையில் நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தை செயல்படுத்த வேண்டும், உழவர்களுக்கு மானியத்துடன் கூடிய பயிர்க்கடன் வழங்க வேண்டும் என உழவர்கள் முன்வைக்காத கோரிக்கைகளுக்காகவும் பா.ம.க. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. உழவர்கள் நலனில் அக்கறைக் கொண்டவர்களைப் போலக் காட்டிக் கொள்ளும் தி.மு.கவும், அ.தி.மு.கவும் உழவர்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றியதில்லை.

ஆனால், எந்த அடிப்படையில் உழவர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், முழு அடைப்புப் போராட்டத்தையும் திமுக நடத்துகிறது என்பது தான் புரியவில்லை. காவிரிப் பிரச்சினைக்கு காரணமே திமுக தான். 1924-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட காவிரி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கத் தவறியதும், 1970-ம் ஆண்டுகளில் காவிரி துணை நதிகளின் குறுக்கே கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட 4 அணைகளை கர்நாடக அரசு கட்டியதை தடுக்கத் தவறியதும் திமுக அரசு தமிழக விவசாயிகளுக்கு செய்த துரோகங்களுக்கு உதாரணமாகும். ஹாரங்கி அணை கட்டுவது குறித்த பிரச்சினை ஏற்பட்ட போது காவிரிச் சிக்கலுக்குத் தீர்வு காணும் நோக்குடன் நடுவர் மன்றம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்று துரோகம் செய்ததும் கருணாநிதி தான். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு 05.02.2007 அன்று வெளியான நிலையில், அதன்பின் 2013-ஆம் ஆண்டு இறுதிவரை 6 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்குமா? என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்து விட்டு, அது பெரிய சர்ச்சையானவுடன் தெரியாமல் செய்து விட்டதாகக் கூறி வருத்தம் தெரிவித்த உழவர்களின் தோழன் யார்? என்பதை இந்த உலகமே அறியும்.

இத்தகைய கடந்த காலத்தைக் கொண்ட திமுகவுக்கு உழவர்களின் நலனுக்காக போராடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? ஒருவேளை கடந்த காலங்களில் உழவர்களுக்கு இழைத்த துரோகங்களுக்கு பரிகாரம் தேடுவதற்காகத் தான் அவர்களுக்கு ஆதரவாக போராட திமுக முன்வந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அதற்காக திமுக தேர்ந்தெடுத்துள்ள போராட்ட வடிவம் பயனளிப்பதை விட பாதிப்பையே ஏற்படுத்தும். ஒரு நாள் முழுவதும் கடைகளை அடைத்தும், போக்குவரத்தை தடை செய்தும் போராட்டம் நடத்தும் போது அதனால் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்பது ஒருபுறமிருக்க, அனைத்துத் தரப்பு மக்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி, முழு அடைப்புப் போராட்டங்களை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அதை மீறி போராட்டம் நடத்தினால், அதன்பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதிமன்றத்திடம் கோர முடியும். உழவர்களின் பெயரால் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள் உழவர்களைத் தான் தூற்றுவர் என்பதால் அவர்கள் தரப்பு நியாயம் அடிபட்டுவிடும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட இருப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 04.02.2009 அன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த போது, உச்சநீதிமன்றத் தீர்ப்பை காரணம் காட்டி அதற்கு அனுமதி அளிக்க அப்போதைய முதல்வர் கலைஞர் மறுத்து விட்டார். அதுமட்டுமின்றி அப்போதைய தலைமைச்செயலர் ஸ்ரீபதி சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மிரட்டும் தொனியில் கடிதம் அனுப்பப்பட்டது. தொப்புள்கொடி உறவுகளாக ஈழத்தமிழரை காப்பாற்றுவதற்கு முழு அடைப்பு நடத்த அனுமதி மறுத்த ஒரு கட்சி, இப்போது உழவர்கள் நலனுக்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி போராட்டம் நடத்தப்போவதாகக் கூறுவதற்கு பெயர் தான் சந்தர்ப்பவாதம்.

உழவர்களின் கோரிக்கைக்கான அனைத்து அறவழிப் போராட்டங்களையும் பா.ம.க. ஆதரிக்கிறது. மாறாக பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயனற்ற போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது, அரசியல் அணி திரட்டும் முயற்சியே தவிர, உழவர்களின் நலன் சார்ந்தது அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது. எனவே, இந்த போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், பாட்டாளி தொழிற்சங்கமும் பங்கேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, இத்தகைய போராட்டங்களைத் தவிர்த்து மக்களுக்கு பாதிப்பற்ற வகையிலான போராட்ட வடிவத்தை கையில் எடுக்கும்படி அனைத்து கட்சிகளையும் பாட்டாளி மக்கள் கட்சி நட்புடன் கேட்டுக்கொள்கிறது’ என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.