‘என் பொண்ணு முகத்தில் எப்படி விழிப்பேன்?’ – வைரல் வீடியோவால் கலங்கும் போலீஸ் ஏ.சி.

0
15687
coimbatore

தமிழ்நாடே நீட்டுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடிக்கொண்டிருக்க, அந்தப் போராட்டக்களத்தில் இருந்து வெளியாகியிருக்கும் ஒரு வீடியோ கோவை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முற்படும் ஒரு ஆண் போலீஸ் இன்னொரு பெண் போலீஸின் மீது கை வைத்துத் தள்ளுகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் காவலர், அவரது கையை விலக்கிவிடுவது போன்று காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்.

police

அந்த வீடியோவில் இருப்பது காவல்துறை உதவி ஆணையர் ஜெயராம். பெண் போலீஸ் ஒரு எஸ். ஐ. கடந்த திங்கள் மாலை அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அரியலூர் அனிதாவின் மரணத்துக்குப் பிறகு கோவையில் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த திங்கள் கிழமை மாலை 4 மணிக்கு கோவை காந்திபுரத்தில் அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக நீட்டுக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு எதிராகவும் மாநில அரசுக்கு எதிராகவும் மாணவர்கள் முழக்கம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை கைது செய்தது. இந்நிலையில், நேற்று இரவு சமூகவலைதளங்களில் பரவிய ‘அந்தக்’ காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ‘பணியில் இருக்கும் ஒரு பெண் போலீஸுக்கே பாதுகாப்பில்லையா?’ என்ற கேள்வியோடு சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

police

வீடியோவில் உள்ள பெண் எஸ்.ஐயைத் தொடர்பு கொண்டோம். அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உதவி ஆணையர் ஜெயராமிடம் விளக்கம் கேட்டோம், “எந்தத் தவறும் செய்யாத என்னைக் குற்றவாளியைப் போல சித்திரிக்கிறார்கள். எனக்கும் பெண் பிள்ளை இருக்கு. ஒரு சாதாரண மனிதன்கூட அந்த இடத்தில் அப்படி நடந்துகொள்ள மாட்டான். அந்த வீடியோவைப் பார்த்ததும் நான் அதிர்ச்சியாகிவிட்டேன். என் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்.

police

வெறும் பரபரப்புக்காக என்னென்னமோ செய்கிறார்கள். என் பொண்ணு முகத்தில் எப்படி விழிப்பேன்? முழுமையான வீடியோவைப் பார்த்தால்தான் உண்மை தெரியும். அந்த இடத்தை மட்டும் கட் பண்ணி ஸ்லோ செய்து போட்டிருக்கிறார்கள். அந்த வீடியோ க்ளிப்பிங்கில் என்னுடைய அட்டென்ஷன் எங்கிருக்கிறது என்று நீங்கள் பாருங்கள்? கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் நான் தீவிரமாக இருந்தேன். அந்த அசாதாரண சூழலில் எனக்கு பக்கத்தில் யார் இருந்தார்கள் என்றுகூட எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த இடத்தைச் சுற்றி அத்தனை கேமராக்கள் இருந்தன. அந்த இடத்தில் அப்படியான எண்ணம்கூட யாருக்கும் வராது. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் செய்தி வெளியிடுகிறார்கள்” என்று கலங்குகிறார்.

இது தொடர்பாக கோவை கமிஷனர் அமல்ராஜிடம் பேசினோம், “விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறோம். என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்பட்ட பிறகு சொல்கிறேன்” என்றதோடு முடித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here