மழை வெள்ளத்துக்காக ஒன்று சேர்ந்த கிராமம் ! – அசத்திய கிராம மக்கள் !

0
965
village

வெள்ளம் என்றாலும், வறட்சி என்றாலும் அரசைக் குறைசொல்வதே தமிழகத்தில் வழக்கமாக இருக்கிறது. இதிலிருந்து மாறுபட்டு தங்கள் கிராமத்துக்குத் தேவையான பாசன, வடிகால் வாய்க்கால்களை முன்கூட்டியே சீரமைத்து, கனமழையின் பாதிப்பை முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறது ஒரு கிராமம்.
village
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமம் அமைந்திருக்கிறது. எல்லா சாதியினரும் கலந்து சுமார் 2,500 குடும்பத்தினர் இங்கு வசிக்கிறார்கள். ஊரைச்சுற்றி சுமார் 600 ஏக்கர் விளைநிலமும் இருக்கிறது. கடந்த காலங்களில் சிறுமழை பெய்தால்கூட, ஊரே வெள்ளக்காடாகிவிடும். வீடுகளிலிருந்து வெளிவரமுடியாமல் தண்ணீரில் தத்தளிப்பதும், நடவு செய்த பயிர்களை வெள்ளத்துக்குப் பறிகொடுப்பதும், தொடர்கதையாக இருந்திருக்கிறது.

இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்ட தங்கள் கிராமத்துக்குத் தூர்வாரும் பணிகளைச் செய்துத்தர வேண்டுமென அரசிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்திருக்கிறது. இதனால் `தன் கையே தனக்கு உதவி’ என்றெண்ணி கிராமத்தினர் ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதனால், மழையால் வரும் துன்பத்தை வென்றுள்ளார்கள்.

எப்படி என்பதை மாப்படுகைக் கிராம குடிமராமத்து கமிட்டித் தலைவர் ராஜேஸ்வரன் விவரித்தார், “எங்கள் கிராமம் எப்போதும் மழையால் பாதிக்கப்படும். இதற்குக் காரணம், ஊரிலுள்ள பதினொரு குளங்களும் அதற்குச் செல்லும் பாசன வாய்க்கால்கள் மண்மூடி கிடப்பதுதான்.
village
எனவே, முக்கியமான ஆறு குளங்களைத் தூர்வாரி அதிலுள்ள வண்டல் மண்ணை மட்டும் அகற்றினோம். அந்த வண்டல்மண் விற்றப் பணத்தை வைத்து பாசன வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாரினோம். அந்த வாய்க்கால்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிலர் ஆக்ரமித்திருந்தார்கள். அவர்களிடம் நாங்கள் ஊரின் நன்மையை எடுத்துச் சொல்லி, அவர்கள் மன ஒப்புதலோடு ஆக்கிரமிப்பை அகற்றினோம்.

தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிக் கொடிமரங்கள்கூட இடையூறாக இருந்தது. சம்பந்தப்பட்ட கட்சிப் பிரமுகர்களுடன் பேசி, அவர்கள் அனுமதியுடனே கொடிமரங்களை அகற்றினோம். ஊரின் நடுவே 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருமாகுளத்தைத் தூர்வாரி அதற்குத் தண்ணீர்ச் செல்லும்வழி வெளியேறும் வழியை முறைப்படுத்தினோம். அதுபோல் வயல்வெளிகளில் உள்ள பாசன வடிகால் வாய்க்கால்களைச் சீரமைத்தோம். இவற்றுக்கான சுமார் 6 லட்சம் ரூபாய் செலவை கிராமத்தில் வசூலித்து பயன்படுத்தினோம். இதனால் இதுவரை பெய்த மழையில் எங்கள் கிராமம் சிறிதளவும் பாதிக்கப்படவில்லை என்பது பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.
Rajeshwaran
இன்னும் எஞ்சிய குளங்களைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியர் எங்கள் கிராமத்தின்மீது கருணைகொண்டு குடிமராமத்துக்கான அரசு நிதியை ஒதுக்கித்தர வேண்டும். அரசின் உதவி கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் மற்றப் பணிகளையும் முடித்துவிட முடிவு செய்துள்ளோம்’ என்று முடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here